டெஸ்ட் போட்டிகளில் முதல் ஆறு இன்னிங்ஸில் வெறும் ஒரு ஓட்டம். இரட்டை இலக்க ஓட்டங்களை பெறவே ஆறு வருட காத்திருப்பு என கிரிக்கெட்டில் ஒருவருக்கு எப்படியான அறிமுகம் இருக்க கூடாது என நினைப்பார்களோ அத்தகைய கடினமான, கேலிக்குரிய அறிமுகத்துடன் ஆரம்பித்தவர் இலங்கை வீரர் மார்வன் அத்தப்பத்து.
ஆனால்,அவர் கிரிக்கெட் வாழ்விலிருந்து ஓய்வுபெறுகின்ற போது, இலங்கையின் மிக நம்பிக்கையான, மிக சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர். மார்வன் அத்தப்பத்து, ரொஷான் மகாநாம, ஹாசன் திலகரத்ன இவர்களை மீறி இலங்கை அணியை டெஸ்ட் போட்டிகளில் முழுமையாக ஆட்டமிழக்க செய்வதென்பது பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனேமே...!
தான் விளையாடிய 90 டெஸ்ட் போட்டிகளில் 16 சதம் மற்றும் 17 அரை சதம் என பெற்றுக்கொண்டவர். இலங்கையை அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் பெற்றுக்கொடுத்த வெற்றிகளை விட, தோல்வியிலிருந்து காப்பாற்றிய போட்டிகள் ஏராளம். டெஸ்ட் போட்டிகளில் அவர் பெற்றிருக்கும் ஆறு இரட்டை சதங்கள் சொல்லும் அவர் எத்தகைய துடுப்பாட்ட வீரர் என...!
ஒருநாள் போட்டிகளிலும் அத்தப்பத்து சளைத்தவர் இல்லை.தான் விளையாடிய 268 போட்டிகளில் 8,500 ஓட்டங்களுக்கு மேல் பங்களிப்பினை வழங்கியவர். 59 அரை சதம் மற்றும் 11 சதங்கள் என தன்னுடைய திறமையை அங்கும் பறைசாற்றியவர்.
இத்தகைய பல சாதனைகளுடனும், புகழுடனும் இலங்கையின் தனித்துவமான துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக சிறந்து விளங்கிய மார்வன் அத்தப்பத்து இன்று தன் 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
Post a Comment