நடராஜனின் முதல் போட்டியும், விக்கெட்களும் (காணொளி இணைப்பு)

 




20 வருடங்களிற்கு பின்னர் சேலத்திலிருந்து ஒரு வீரருக்கு ரஞ்சிக்கோப்பை விளையாடுவதற்கான வாய்ப்புக் கிடைக்கின்றது.முதல் போட்டியிலேயே அவருடைய பந்துவீச்சு முறையில் சந்தேகங்கள் எழுப்புகின்றார்கள்.தன்னுள் கொழுந்துவிட்டு எரிந்த இலட்சிய நெருப்பினால் துவண்டு விடாமல் பந்துவீச்சு முறையை சிறிது மாற்றி அடுத்த வருடமே TNPL இன் நடராஜராக சிவதாண்டவம் ஆடுகின்றார். இதன் விளைவாக பஞ்சாப் அவரே நினைத்துப் பார்க்காத தொகையில் ஏலத்தில் எடுக்கின்றது.ஆனால் மீண்டும் உபாதைக்குள்ளாக ஒரு வருடம் TNPLஐத் தாண்டி வேறு போட்டிகளை ஆட முடியவில்லை.
சரி அவ்வளவுத்தான் ஐபிஎல் கனவு முடிந்துவிட்டது என்று நினைத்த வேளை ஆரம்பத்தொகையான 40 லட்சத்திற்கு இவரை சன் ரைஸர்ஸ் அணி ஏலத்தில் எடுக்கின்றது.கிரிக்கெட்டிற்கு திறமை எவ்வளவு முக்கியமோ அதேயளவு அதிர்ஷ்டமும் முக்கியம் என்பார்கள்.ஹைதரபாத்தின் பந்துவீச்சு பலமாக காணப்பட்டதால் முதல் இரு வருடங்களும் பெஞ்சில் உட்கார வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றார்.2020 இல் யாருக்குமே பலனளிக்காத அதிர்ஷ்டம் தேவதை இவருடைய வாசற்கதவைத் மட்டும் வெகுவாகத் தட்டுகின்றது.மிட்செல் மார்ஷ்,புவனேஷ்குமார் என்று வேகப்பந்திற்கான சன்ரைஸர்சின் அனைத்து வாய்ப்புக்களும் காயத்தினால் சுக்கு நூறாகிப்போக நடராஜனின் பல வருட தவத்திற்கான பலன் 2020இல் கிடைக்கின்றது.
முன்னர் மலிங்கவினுடைய பெயர் மாத்திரமே எட்டிப்பார்த்த ஐபில்லின் யோர்க்கர் சரித்திரத்தில் இம்முறை அவ்விடம் ரபாடாவாலா பும்ராவாலா மாற்றி எழுதப்படும் என்று அனைத்து கிரிக்கெட் பிரியர்களும் எதிர்ப்பார்த்து காத்திருந்த வேளையில் அவர்களுக்கு மேலாக ஒரு பெயர் எட்டிப்பார்க்கின்றது.Qualifier 2 போட்டியின் இறுதி ஓவரில் வர்ணணையாளர் நடராஜனுடைய பிரச்சினை அவர் யோர்க்கர் தான் வீசுவார் என்று துடுப்பாட்ட வீரர்கள் கணித்து விடுவார்கள் அப்படியிருக்கையால் அவரால் துல்லியாமாக ஆறு பந்துகளையும் யோர்க்கர் Lengthஇல் எறிய முடியுமா என்று கேட்க அதற்கான பதிலை அந்த ஓவரிலேயே நடராஜன் கொடுக்க சக வர்ணனையாளர் He has answered your question என்று கூறுவார்.இதனைப் பார்த்து சிகிச்சையிலிருந்து மீண்ட கபில்தேவ் இவ்வளவு துல்லியமாக யோர்க்கர் வீசும் பந்துவீச்சாளரைத் தான் கண்டது இல்லை என்று பாராட்டித் தள்ளினார்.
கோலி,தோனி,வாட்சன்,ரசல் என்று பல ஜாம்பவான்களுடைய விக்கெட்டுக்களைத் தகர்த்தாலும் தன் குழந்தை பிறந்த நாளன்று டிவில்லியர்ஸ் உடைய விக்கெட்டைத் தகர்த்து ஆட்டத்தின் போக்கையே மாற்றியது காலத்திற்கும் நின்று பேசும்.இவ்வாறு தன் திறமையை சர்வதேச அரங்கில் நிரூபித்துவிட அதிர்ஷ்ட தேவதை வலைப் பந்துவீச்சாளராக இவரை அவுஸ்திரேலியாவிற்கு கூட்டிச் செல்கின்றது.அத்தோடு நில்லாமல் வருணிற்கு காயம் ஏற்பட T20 வாய்ப்பு பின்னர் Sainiஇற்கு பதிலாக ஒரு நாள் வாய்ப்பு என்று இன்று வரை அழைத்து வந்து இனி உன்னுடைய திறமையை நீ நிருபீக்க வேண்டிய நேரம் என்று களம் அமைத்துக்கொடுத்து விட்டுச் சென்றிருக்கின்றது.
20 வயதில் தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை ஆரம்பித்து காலங்காலமாக பேணப்பட்டு வரும் எழுதப்படாத சில வரையறைகளை உடைத்து இன்று கோலியின் கையினால் சர்வதேசக் கிரிக்கெட்டிற்கான தொப்பியைப் பெறும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளார்.

சேலத்திலிருந்து அவுஸ்திரேலியா வரையிலான இவரது பயணம் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கின்ற ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் இருக்கின்ற சிறிய நெருப்பை நிச்சயம் இன்று பெருந்தீயாக மாற்றியிருக்கும்.நடராஜனும் தொடர்ந்து சாதிக்க வேண்டும் கிர்க்கெட்டில் தொடர்ந்து நடராஜன்களும் அவதரிக்க வேண்டும். 

Post a Comment

Previous Post Next Post